திருச்செந்தூர் கோயிலில் நாளை ஆவணித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி!
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்று ஆவணி திருவிழா. இந்த நிலையில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 7-ம் நாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்திலும், 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் நாளை (23-08-2025) காலை 7-00 மணிக்குமேல் 7-30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
இதில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.