ஆடி அமாவாசை திருவிழா - சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
கரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வனப்பகுதியில் குடில் அமைத்துத் தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வழிபாடு செய்வர். திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் இருந்து பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு 200 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மழைச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பகுதியில் 4 நாட்களுக்கு தனியார் வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இவ் விழாவை முன்னிட்டு வனத்துறையினர் 120 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.