நண்பர்கள் சவாலால் பறிபோன இளைஞரின் உயிர்!
தாய்லாந்தில் நண்பர்கள் விடுத்த சவாலில் வெற்றி பெறுவதற்காக 2 மது பாட்டில்களை குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களிடம் சவால் விடுவதும் அதனை ஏற்றுக்கொண்டு சவாலில் வெல்வதும் சாதாரண ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சவால்கள் சில நேரங்களில் ஆபத்தில் முடிவதும் உண்டு. அந்த வகையில், கடந்த நவம்பவர் மாதம் பெங்களூரில் நண்பர்கள் விடுத்த சேலஞ்சிற்காக 32 வயதான நபர் ஒருவர் பட்டாசு மீது அமர்ந்ததும், பட்டாசு வெடித்ததில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததையும் நாம் அறிவோம். அதேபோன்று ஒரு சம்பவம் தற்போதும் நிகழ்ந்துள்ளது.
தாய்லாந்தை சேர்ந்தவர் காந்தே. 21 வயதான இவர் இன்ஸ்டாகிராம், யூட்யூப் பிரபலம் ஆவார். இந்த நிலையில், காந்தேவுக்கு அவரது நண்பர்கள் 20 நிமிடத்திற்குள் 2 மதுப்பாட்டில்களை முழுவதுமாக குடித்து முடித்தால் ரூ.75 ஆயிரம் தருவதாக சவால் விட்டனர். சவாலை ஏற்றுக் கொண்ட காந்தேவும் 350 மி.லி கொள்ளளவு கொண்ட 2 விஸ்கி பாட்டில்களை வாங்கி வேகவேகமாக குடித்தார்.
குடித்து முடித்த சில நிமிடங்களிலேயே காந்தே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரின் நண்பர்கள் அருகில் இருந்தவர்கள் உதவியுடம் காந்தேவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காந்தே மது போதையில் இருந்த காரணத்தினால் அவருக்கு சரியான சிகிச்சைகள் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதானல் காந்தே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.