For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை? - போலீசார் தீவிர விசாரணை

05:07 PM Jan 08, 2024 IST | Web Editor
பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை    போலீசார் தீவிர விசாரணை
Advertisement

பட்டுக்கோட்டை அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண், ஆணவக் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் ஐஸ்வர்யா (19).  பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர்.  இவரின் மகன் நவீன் (19).  மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.  இது தொடர்பாக,  ஐஸ்வர்யா பெற்றோர் மற்றும் உறவினர்கள்,  நவீன் பெற்றோரிடம் `உன் மகன் என் மகளுடன் பழகக் கூடாது.  மீறினால் என்ன நடக்கும் என்றே தெரியாது' எனப் பிரச்னை  செய்துள்ளனர்.  அதன் பிறகும்,  யாருக்கும் தெரியாமல் இருவரின் காதலும் தொடர்ந்துள்ளது.  இந்த நிலையில் படிப்பை முடித்த இருவரும் திருப்பூரில் வெவ்வேறு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,  இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  திருமணம் குறித்த தகவலறிந்த ஜஸ்வர்யாவின் உறவினர்கள்,  நவீன் அப்பாவிடம் சென்று உன் பிள்ளையை நீ அழைத்துக் கொள், எங்கள் மகளை நாங்கள் அழைத்து செல்கிறோம் என கூறியுள்ளனர்.  மேலும், இதனை யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பின்னர்,  இவர்கள் இருக்குமிடத்தை அறிந்த பல்லடம் காவல் நிலைய போலீஸார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  பேச்சுவார்த்தையின் போதே ஜஸ்வர்யாவின் உறவினர்கள் ஐஸ்வர்யாவை அழைத்து சென்றுள்ளனர்.

பின் நவீன் தனது சொந்த ஊருக்கு சென்றார். மறுநாள் ஐஸ்வர்யா மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த ஜஸ்வர்யாவின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்துள்ளனர்.  இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நவீன் கூறியதாவது;

ஐஸ்வர்யாவும்,  நானும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தோம்.  திருப்பூரில் வேலை செய்த இருவரும்,  கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரே அறையில் ஓன்றாக தங்கியிருந்தோம்.  அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம்.  ஐஸ்வர்யாவின் உறவினர்கள் எங்களை தேடி வந்த நிலையில் நாங்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டோம். நம்மை கொலை செய்து விடுவார்கள் வா நாம் எங்காவது சென்று விடலாம் என ஐஸ்வர்யா கூறினார்.  அதற்குள் பல்லடம் காவல் நிலையத்திலிருந்து வந்த ஒரு போலீஸ் நாங்கள் இருக்கின்ற இடத்துக்கு வந்து ஐஸ்வர்யாவை மட்டும் அழைத்தார்.  நான் விட முடியாது, நானும் கூட வருவேன் என்றேன்.  உன்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் அப்படி வெறியுடன் இருக்கிறார்கள் எனக்கூறி அவளை அழைத்து சென்றார்.

நான் காவல் நிலைய வாசலில் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.  போலீஸிடம் பேசிய பிறகு,  ஐஸ்வர்யாவை அவளது உறவினர்கள் அழைத்து சென்றனர்.  நான் பைக்கிலேயே ஐஸ்வர்யா சென்ற காரை தொடர்ந்து சென்றேன்.  கார் ஐஸ்வர்யா ஊருக்குள் சென்ற பிறகு,  நான் என் வீட்டுக்கு திரும்பி விட்டேன்.  மறுநாள், ஐஸ்வர்யா இறந்து விட்டதாக தகவல் வந்தது.  உடனே பதறியடித்து கொண்டு ஓடினேன்.  என் அப்பாவும், நண்பர்களும் என்னை போக விடாமல் தடுத்து விட்டனர்.  போலீஸ் அழைத்த போது நான் போக மாட்டேன் என சொன்னவளை நான் தான் அனுப்பி வைத்தேன்.  அதன் பிறகு. அவள் முகத்தை கூட
பார்க்க முடியாமல் செய்து விட்டனர்.

பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருப்பது,  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவத்தால் பூவாளூர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement