‘2023-ல் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் தனது துணையால் கொலை’ - ஐநா அதிர்ச்சி தகவல்!
கடந்த 2023-ல் உலகளவில் 10 நிமிடங்களுக்கு ஒரு பெண் தனது வாழ்க்கை துணையாலோ, குடும்பத்தினராலோ கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு, ஐ.நா பெண்கள் அமைப்பு இணைந்து பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினமான நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்தாண்டு மட்டும் கிட்டதட்ட 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் மக்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐநா-வின் அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது:
சுமார் 60% அல்லது 51,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களின் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் இறந்துள்ளனர். இது அவர்களின் உறவினர்களால், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருவர் கொல்லப்படுவதற்கு சமம். வீடுதான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தான இடமாக உள்ளது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கொலைக்கு பலியாவதில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், கடந்தாண்டு கொல்லப்பட்டவர்களில் 80% பேர் உறவினர்களாலேயே இறந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் அவர்களுக்கு நெருக்கமான ஒருவரால் கொல்லப்பட்டதில், 21,700 பெண்களுடன் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் அறிக்கையில் ஒப்பிடுகையில் மிக குறைந்தளவு கொலைகள் (2,300 கொலைகள்) நடந்துள்ளன.
சில நாடுகளில் பெண்கொலைகளை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், ஆழமாக வேரூன்றியுள்ள பாலின சமத்துவமின்மை மற்றும் ஸ்டீரியோடைப் போன்றவற்றால் கொலைகள் தொடர்கின்றன. இந்த அறிக்கை 107 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.