ஸ்கூட்டர் விலையை விட அதிக அபராதம் - அதிர்ச்சி அடைந்த பெண்!
பெங்களூருவில் ஸ்கூட்டரில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பானஸ்வாடியை சேர்ந்த அப்பெண், காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாமல் செல்வது, விதிகளை மீறி நிறைய ஆட்களை ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்வது, மொபைல் போனில் பேசிக்கொண்டே சிக்னலை மதிக்காமல் செல்வது, தவறான ரூட்டில் செல்வது என கிட்டத்தட்ட 270 முறை போக்குவரத்து விதிகளை அப்பெண் மீறியுள்ளார்.
இது அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. சமீபத்தில் கேமராக்களை பரிசோதித்த போலீசார், அந்தப் பெண்ணின் நடவடிக்கையை கவனித்து 1.36 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தற்போது அந்தப் பெண்ணின் ஸ்கூட்டரை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரை கடுமையாக எச்சரிக்கவும் செய்தனர். போலீசார் விதித்துள்ள அபராதம் அவரின் ஸ்கூட்டர் விலையை விட அதிகம் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.