அன்பான தாய்.. அடிபணியும் காளை... | குழந்தையை போல் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள்...!
ஜல்லிக்கட்டு காளைகளின் மீது கொண்ட அதீத அன்பால் தாயாக மாறி காளைகளை பராமரித்து வருகிறார் பெண் ஒருவர். அவர் குறித்து செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதந்திராதேவி. இவரது கணவர் கதிரேசன் பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். திருமணத்திற்கு பின் குமரேசன் ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதை வெறுத்த சுதந்திரா தேவி, பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவர் வளர்த்த காளைகள் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றதை அடுத்து காளை வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளார். இதுவரை 10க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்துள்ள சுதந்திரா தேவி காளைகளை ஒரு தாயைப்போலவே அன்புடன் பராமரித்து வருகிறார்.
மிகவும் சுகாதாரமான முறையில் காளைகளை பராமரித்து வரும், சுதந்திரா தேவி ஏழ்மையான சூழ்நிலையிலும், சத்தான உணவுகளையே தான் வளர்க்கும் காளைகளுக்கு வழங்குகிறார். அதுமட்டுமில்லாமல் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளையும் காளைகளுக்கு சுதந்திரா தேவியே வழங்கி வருகிறார். பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் காளைகளை இவரே அழைத்து செல்கிறார். அதே போல் வாடிவாசலில் கொம்பு வச்ச சிங்கமாய் சீறிப்பாயும் காளை இவரை கண்டதும் அமைதியாக பின்னால் செல்கிறது.
இரண்டு காளைகளை வளர்த்து வரும் சுதந்திரா தேவி ஆரம்பத்தில் தனக்கு பேரும் புகழையும் பெற்று தந்த காளைக்கு வைத்த மன்னன் என்ற பெயரையே தற்போது வளர்க்கும் காளைகளுக்கு வைத்துள்ளதாகவும், இதுவரை களம் கண்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்திலும் வெற்றியை மட்டுமே பதிவு செய்து, பரிசுகளை வென்ற காளைகள் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியிலும் வெற்றியை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு சிறப்பு உதவிகளை அரசு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த ராமன் எனும் மாடுபிடி வீரர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும், முக்கிய நபர்களின் காளைகளை அடக்கும் போது முதலில் பாராட்டி வந்தவர்கள், சமீபகாலமாக அவர்களின் காளைகளை அடக்கினால் மிரட்டல் விடுப்பதாகவும், இது போன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
ஜல்லிக்கட்டு காளைகள் மீது கொண்ட அதீத பாசத்தால் தாயாக காளைகளை பராமரித்து அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த முழு செய்தியை காணொளியாக காண: