மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!
மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற ‘பாகுபலி’ யானை அந்த வழியாக வந்த காரை துரத்தி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில் பாகுபலி என்னும் யானை தினம்தோறும் நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து கல்லாருக்கும், கல்லாரில் இருந்து நெல்லி மலைக்கும் இடம்பெயர்ந்து வருகிறது. அப்போது யானை இந்த இரண்டு வனப்பகுதிக்குள் நடுவே உள்ள சமயபுரம் கிராமத்தின் வழியாக சாலையைக் கடந்து சென்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு நெல்லிமலையில் இருந்து கல்லார் வனத்திற்கு சென்ற
யானை பாகுபலி இன்று காலை மீண்டும் நெல்லி மலை வனத்திற்கு செல்ல பவானி
ஆற்றினை கடந்து வந்தது. அப்போது அந்த யானை சமயபுரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலையின் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.
இதையும் படியுங்கள் : 2024ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் அரண்மனை 4 – குஷ்பூ சுந்தர்!
யானை இருப்பது தெரியாமல் கார் ஒன்று அந்த சாலையில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, அங்க இருந்து பொதுமக்கள் காரை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கார் ஓட்டுநரும் காரை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென யானை பாகுபலி அந்த காரை துரத்தியுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்த நிலையில், யானை அருகில் வந்தவுடன் விரைவாக காரை எடுத்துச் சென்றார். பின்னர், கார் வேகமாக சென்றதை அடுத்து, யானை நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்றது.
வறட்சி துவங்கிய நிலையில் யானைகளின் நடமாட்டம் மேலும் அதிகரிக்க கூடும்
என்பதால் வனத்துறையினர் இந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு
யானை - மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம
மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.