மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் காணொலி? - உண்மை என்ன?
This News Fact Checked by NewsMeter
வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலர் சேர்ந்து லாரியில் தூக்கிச் செல்வது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ தவறான தகவலை பரப்பும் வகையில் அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலர் சேர்ந்து லாரியில் தூக்கிச் செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "வாக்கு இயந்திரத்தை பானி பூரி மாதிரி தூக்கிட்டு போரானுக வடக்கன்ஸ்.. இப்படி தேர்தல் நடத்தினால் பிஜேபி 400 இல்ல, 4000 சீட் கூட ஜெய்க்கும்" என்ற தலைப்புடன் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு:
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்க்கப்பட்டது. அப்போது, 2022-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்படுவதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் சென்ற லாரியை கண்டவுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்ற தலைப்புடன் Mojo Story என்ற சேனல் தனது யூடியூப் பக்கத்தில் காணொலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இச்சம்பவம் 2022-ம் ஆண்டு நடைபெற்றது என்பதை அறிய முடிந்தது.
“சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வாரணாசியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த இயந்திரங்கள் லாரியில் ஏற்றப்படுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இவை வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்பட்டவை அல்ல என்றும் அவை பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வாரணாசி மாவட்ட ஆட்சியர் கூறினார்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம் 2022-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அந்த பதிவில், “வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு நாளை (09.03.2022) புதன்கிழமை இரண்டாம் கட்ட பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மண்டி பகுதியில் கிடங்கில் இருந்து பயிற்சி நடக்கவிருந்த உத்திரபிரதேச கல்லூரிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வாக்களிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வலுவான அறைக்குள் சீல் வைக்கப்பட்டு மத்திய துணை ராணுவப் படையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளால் சிசிடிவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளது.
முடிவு:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்பட்டதாக வைரலாகும் காணொலி 2022-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டவை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.
Note : This story was originally published by ‘NewsMeter’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.