SBI -ன் Rewardsகளை பெற இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும் என வைரலாகும் பதிவு - உண்மை என்ன?
This News Fact Checked by Telugu Post
நீங்கள் எஸ்பிஐ ரிவார்ட்ஸ் புள்ளிகளை Redeem செய்ய விரும்பினால், உங்களுக்கு அனுப்பப்பட்ட எஸ்பிஐ ரிவார்ட்ஸ் செயலியின் apk கோப்பைப் பதிவிறக்கவும் என சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
உலகின் பெரும்பாலான நாடுகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கித் தவிக்கின்றன. சைபர் கிரைம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது, வங்கிக் கணக்கை ஊடுருவி பணம் பறிப்பது, கடவுச்சொல், பாதுகாப்பு மீறல் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்களைக் கொள்ளையடிப்பது போன்ற சட்டவிரோத செயல்களை உள்ளடக்கியது. இந்த இணைய மோசடிக்கு தினமும் யாராவது ஒருவர் பலியாகின்றனர். சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. நீங்கள் எஸ்பிஐ ரிவார்ட்ஸ் புள்ளிகளை Redeem செய்ய விரும்பினால், உங்களுக்கு அனுப்பப்பட்ட எஸ்பிஐ ரிவார்ட்ஸ் செயலியின் apk கோப்பைப் பதிவிறக்கவும் என பதிவு பகிரப்பட்டது
வைரலான செய்தியில் 'அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் எஸ்பிஐ நெட்பேங்கிங் ரிவார்டு புள்ளிகள் ரூ. 9980.00 இன்றுடன் காலாவதியாகிறது! எஸ்பிஐ ரிவார்ட்ஸ் ஆப்ஸை இன்ஸ்டால் செய்து, இப்போதே ரிடீம் செய்யுங்கள். உங்கள் கணக்கில் பணத்தை வரவு வைப்பதன் மூலம் வெகுமதிகளைப் பெறுவீர்கள். நன்றி Team, SBI '' என்று எழுதப்பட்டிருந்தது.
உண்மைச் சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு குறித்து விசாரணை நடத்தியபோது சமூக ஊடக பயனர்களை தவறாக வழிநடத்தும் வகையில் வைரலான செய்தி செயல்படுகிறது எனவும் எஸ்பிஐ ரிவார்டு ஆப் பற்றிய வைரல் செய்திக்கும் எஸ்பிஐக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
வைரலான செய்தியின் பின்னணியில் உள்ள உண்மையை அறிய கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம். இதன் முடிவில் எஸ்பிஐ ரிவார்டு பாயின்ட் தொடர்பான எந்த செய்தியும் அல்லது தகவல்களும் கிடைக்கவில்லை. பிறகு சில முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். தேடுதலில் எஸ்பிஐயின் எக்ஸ் கணக்கில் வைரலான செய்தி தொடர்பான ட்வீட் கிடைத்தது. நவம்பர் 05, 2024 அன்று, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ கணக்கில் X "எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு: மோசடி செய்பவர்களிடம் ஜாக்கிரதை. எஸ்பிஐ ரிவார்டு பாயிண்டுகளை மீட்பதற்காக எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் மோசடி செய்பவர்கள் மெசேஜ்கள் மற்றும் APKக்களை அனுப்புவது கவனிக்கப்படுகிறது. எஸ்பிஐ ஒருபோதும் அப்படி அனுப்புவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் இதுபோன்ற செய்திகள் மற்றும் APKகளைப் பகிர்ந்துகொள்வது அல்லது தெரியாத ஆப்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்" என வைரலான படத்தையும் பகிர்ந்து எஸ்பிஐ விளக்கம் அளித்தது.
இதேபோல நவம்பர் 02, 2024 அன்று PIB தனது X பக்கத்தில் "ஜாக்கிரதை. SBI ரிவார்டுகளைப் பெற APK கோப்பைப் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யும்படி மெசேஜ்கள் உங்களுக்கு வந்துள்ளதா. @TheOfficialSBI இணைப்புகளையோ APK கோப்புகளையோ SMS/WhatsApp மூலம் SBI அனுப்பாது. தெரியாததைப் பதிவிறக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளது. செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டின் படி, இந்த புதிய மோசடி வாட்ஸ்அப் போன்ற சேனல்கள் மூலம் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியைக் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்கள் “எஸ்பிஐ நெட்பேங்கிங் ரிவார்டு பாயிண்ட்களை” சேகரித்ததாகக் கூறுகிறது.
வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களுக்கு போலி மெசேஜ்கள் மற்றும் APK இணைப்புகளை அனுப்பும் மோசடி செய்பவர்களால் இந்த செய்திகள் அனுப்பப்படுகின்றன என்பது தெளிவாகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எந்த செய்தியையும் அனுப்பவில்லை என்று எஸ்பிஐ மறுத்துள்ளது. உங்களுக்கு இதுபோன்ற செய்திகள் வந்தால், கவனமாக இருக்கவும், அத்தகைய இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் மோசடி செய்பவர்களிடம் ஜாக்கிரதை என்றும் எஸ்பிஐ அறிவுறுத்துகிறது. மேலும், இதுபோன்ற அறியப்படாத கோப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் அல்லது அத்தகைய இணைப்பைக் கிளிக் செய்தால், உங்கள் ஸ்மார்ட் போனில் வைரஸ் அல்லது மால்வேரை நிறுவி உங்கள் தனிப்பட்ட கணக்கு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் அல்லது பிற தனிப்பட்ட தகவல்களைப் மோசடி செய்பவர்களால் எடுத்துக் கொள்ள முடியும்.
எனவே உங்களுக்காக எஸ்பிஐ ரிவார்ட்ஸ் புள்ளிகளை உண்மையில் ரிடீம் செய்ய, வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ எஸ்பிஐ ரிவார்ட்ஸ் இணையதளத்தில் ( https://rewardz.sbi/ ) உள்நுழையலாம் அல்லது சரிபார்க்கப்பட்ட எஸ்பிஐ ரிவார்ட்ஸ் வாடிக்கையாளர் சேவையை 1800-209-8500 என்ற எண்ணில் அழைக்கலாம். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை நீங்கள் கண்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாரளிக்கவும். நம்பகமான ஆதாரங்களில் இருந்து நீங்கள் பெறும் இணைப்பு அல்லது apk கோப்பை மட்டும் பதிவிறக்கவும். இணைய மோசடி செய்பவர்களின் வலையில் நீங்கள் இன்று விழுந்திருந்தால், இணைய மோசடி செய்பவர்கள் மற்றும் இணையக் குற்றங்கள் குறித்து ஏதேனும் புகாரைப் பதிவு செய்ய, தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்ட்டல் ஹெல்ப்லைன் எண்-1930ஐத் தொடர்புகொள்ளலாம். அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கலாம்.
உங்கள் புகாரை cybercrime.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் . சமூக வலைதள பயன்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் வைரலான செய்திகள் செயல்படுகின்றன என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எஸ்பிஐ, வைரல் செய்தியில் காணப்படுவது போல் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் எந்த செய்தியையும் பகிரவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
முடிவு :
SBI ரிவார்ட்ஸ் புள்ளிகளைப் பெற, SBI ரிவார்ட்ஸ் ஆப்பை பதிவிறக்கவும் என சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக SBI அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியையும் அல்லது apk கோப்புகளையும் பகிரவில்லை என்று உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Telugu Post’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.