நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து என அமிதாப் பச்சன் பேசுவதாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
This news Fact Checked by PTI
நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்து குறித்து அமிதாப் பச்சன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மைய விரிவாக காணலாம்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இந்திய தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் ரஜத் சர்மா ஆகியோரின் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இருவரும் ஒரு புதிய மருந்தின் மூலம் நீரிழிவு நோயை முழுவதுமாக குணப்படுத்தி விடலாம் என கூறுகின்றனர். வைரலான வீடியோவில், அமிதாப் பச்சன் இரண்டு வாரங்களில் சர்க்கரை நோயிலிருந்து நிரந்தரமாக விடுபடுவது குறித்தும், நாட்டில் செயல்படும் மருந்து நிறுவனங்களைத் தாக்குவது குறித்தும் பேசுவதைக் கேட்கலாம்.
நவம்பர் 19 அன்று 'பேஸ்புக்' இல் சர்க்கரை இல்லாத புதிய வாழ்க்கை என்று எழுதப்பட்ட பதிவு ஒன்று "🧡🧡🧡 அமிதாப்பின் பேச்சு நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றக் கூடியது🧡🧡🧡'' எனும் தலைப்பில் வைரலானது. வீடியோவின் தொடக்கத்தில் இந்தியா டிவியின் செய்தி தொகுப்பாளர் ரஜத் சர்மா, "அமிதாப் பச்சன் இன்று நாட்டின் ஒரு பெரிய மருந்து நிறுவனத்தை விமர்சித்துள்ளார். மேலும் சில நாட்களில் நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருந்து குறித்தும் அமிதாப் பச்சன் பேசியுள்ளார்” என தெரிவிக்கும் வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில் தோன்றிய அமிதாப் பச்சன் “நண்பர்களே, இன்று நான் உங்கள் முன் ஒரு நட்சத்திரமாக அல்ல, உங்கள் சகோதரனாக நிற்கிறேன். சர்க்கரை நோய் நம் குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கும் போது இன்னும் எத்தனை பொய்களை நாங்கள் பொறுத்துக்கொள்வோம்? நான் அமைதியாக இருக்க மாட்டேன் நீரிழிவு நோயிலிருந்து உங்களை விடுவிக்கும் ஒரு சிகிச்சை இருக்கிறது, அதுவும் ஊசி மற்றும் மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் அவை சாத்தியம். நீங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மருந்து கிடைக்கும் வரை நான் போராடுவேன் என தெரிவித்திருந்தார்.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய, வீடியோவை கவனமாகக் கேட்டுப் பார்த்ததில் வீடியோவில் உள்ள அமிதாப் பச்சன் மற்றும் ரஜத் சர்மாவின் உதடு அசைவுகள் அவர்களின் வார்த்தைகளுடன் பொருந்தவில்லை என்பதை கண்டறிய முடிந்தது. உச்சரிப்பிலும் பல தவறுகள் உள்ளன, இது வீடியோவின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வைத்தது. தொடர்ந்து, வைரலான வீடியோவின் முக்கிய பிரேம்களின் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தினோம். வைரலான வீடியோவில் அமிதாப் பேசும் போது, ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவி நீதா அம்பானியை பார்வையாளர்களில் பார்த்தோம். அசல் வீடியோவிலும், நீதா அம்பானி அதே ஆடைகளை அணிந்திருந்தார். இந்த வீடியோ திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் (DAIS) சேனலில் 31 மே 2018 அன்று பதிவேற்றப்பட்டது, DAIS இன் 2018 பட்டமளிப்பு விழாவில் அமிதாப் பச்சன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அசல் வீடியோவின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே பார்க்கவும்
இந்த பட்டமளிப்பு விழா மே 28, 2018 அன்று நடைபெற்றது, அமிதாப் பச்சன் ஐபி டிப்ளமோ பெற்ற 104 பட்டதாரிகளுக்கு முன்னிலையில் சிறப்புரையை வழங்கினார். வைரலான வீடியோவில், அமிதாப்பின் இந்த பேச்சின் ஒரு பகுதி அதன் அசல் ஆடியோவில் இருந்து மாற்றப்பட்டு, சர்க்கரை நோயை நிரந்தரமாக ஒழிப்பது குறித்தும், மருந்து நிறுவனங்களை தாக்குவது குறித்தும் பேசும் ஆடியோ சேர்க்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில், ட்ரூமீடியாவின் AI கண்டறிதல் கருவிகள் மூலம் வைரல் வீடியோவை ஸ்கேன் செய்ததில் வீடியோவில் பயன்படுத்தப்பட்ட ஆடியோ AI ஆல் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இங்கே கிளிக் செய்வதன் மூலம் முழு அறிக்கையைப் பார்க்க முடியும்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இந்தியா டிவி செய்தி தொகுப்பாளர் ரஜத் சர்மா ஆகியோரின் வித்தியாசமான வீடியோவின் எடிட் செய்யப்பட்ட பகுதி என்று PTI Fact Check Desk இன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஒரிஜினல் ஆடியோ மாற்றப்பட்டு, சர்க்கரை நோயை என்றென்றும் நீக்கும் என்று ஆடியோவில் புதிய க்ளைம் சேர்க்கப்பட்டுள்ளது . வைரலான வீடியோ முற்றிலும் திருத்தப்பட்டு போலியானது.
முடிவு :
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இந்தியா டிவி செய்தி தொகுப்பாளர் ரஜத் ஷர்மாவின் வித்தியாசமான வீடியோவின் எடிட் செய்யப்பட்ட பகுதி என்று PTI Fact Check Desk நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதாகக் கூறும் ஆடியோவுடன் அசல் ஆடியோ மாற்றப்பட்டுள்ளது. வைரலான வீடியோ முற்றிலும் திருத்தப்பட்டு போலியானது.
Note : This story was originally published by PTI and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.