கேரளத்தைச் சேர்ந்த இந்தியருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரை மீட்பதற்காக நிவாரண நிதி அளிப்பதற்கு ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
Advertisement
கேரள மாநிலம், கோழிக்கோடு, ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் கடந்த 2006-ம் ஆண்டு தனது 20வது வயதில் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு குடும்பத்தினரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். அதே ஆண்டில் அக்குடும்பத்தினருடன், அப்துல் ரஹீமுக்கு பிரச்னை ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில், முதலாளியின் மாற்றுத் திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவி துண்டிக்கப்பட்டு அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்தான். இந்த பிரச்னையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில் அச்சிறுவனின் இறப்புக்கு ஈடாக 15 மில்லியன் சவூதி ரியாலை (இந்திய மதிப்பில் ரூ.34 கோடி) பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிதியை அளித்தால் அப்துல் ரஹீம் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு ஏற்படும். இந்த சூழலில், நிதி திரட்டுவதற்காக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஓர் அமைப்பை உருவாக்கினர். அவர்கள், குழந்தையின் மரணம் தற்செயலான ஒன்று என்றும் அது வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல என்றும் கூறி நிதி திரட்ட ஆரம்பித்தனர்.
இதற்காக 'சேவ் அப்துல் ரஹிம்' என்ற செல்போன் செயலியை நிறுவி கூட்டு நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டனர். சவூதியில் உள்ள அப்துல் ரஹீமின் நண்பர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். இதன் பலனாக கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்தது.
A true Kerala Story: In a crowd funding, thousands of Keralites cutting across religion and castes from India and abroad joined together, to successfully raise around ₹ 34 crore as blood money for the release of a Kozhikode autorickshaw driver sentenced to death in Saudi Arabia. pic.twitter.com/TUullVY60A
இந்த நிகழ்வு குறித்து அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா கூறுகையில், "18 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார். இதற்கிடையே, அப்துல் ரஹீமின் குடும்பத்தினரை கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். “இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. அரசியல், மதங்களை கடந்து, ரஹீமின் விடுதலைக்காக மக்கள் தங்கள் பங்களிப்பை அளித்தனர்" என்றார்.