9 அடி ஆஞ்சநேயருக்கு ஒரு டன் காய்கனிகள் அலங்காரம் - ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு!
ஆடி அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள 9 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவிலில், ஒரு டன் எடை கொண்ட 40 விதமான காய்கனிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசித்தனர்.
ஆடி அமாவாசை தினமான நேற்று, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், நல்ல மழை பொழிந்து நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் இந்த சிறப்புமிக்க காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது.
9 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, தக்காளி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, வாழைக்காய், குடை மிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள் என மொத்தம் ஒரு டன் எடையுள்ள 40 விதமான காய்கனிகளைக் கொண்டு இந்த பிரம்மாண்ட சாகம்பரி அலங்காரம் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
ஆஞ்சநேயரின் திருமேனி முழுவதும் காய்கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு, பார்ப்பதற்கு கண்கவர் காட்சியாக அமைந்தது. காய்கனி அலங்காரத்தைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பஞ்சார்த்தி காண்பிக்கப்பட்டது.
மேலும், திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆயிரத்து ஒரு முறை இராமநாம ஜெபமும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன், குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்த பிறகு, பிரமாண்டமான மகாதீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 16 விதமான சோடஷ உபசாரங்களும் செய்யப்பட்டது.
இந்த வழிபாடுகளில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.