பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் (email) காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடையாளம் தெரியாத முகவரியிலிருந்து வந்த இந்த மின்னஞ்சலில், பிற்பகல் 1.25 மணிக்கு குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மின்னஞ்சல் குறித்து தகவல் கிடைத்தவுடன், வீரபாண்டி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஒரு போலியான மிரட்டல் என்பது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.