திடீரென உள்வாங்கிய சாலை... தலைக்குப்புற கவிழ்ந்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்!
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற கார் தரமணி டைட்டல் பார்க் சிக்னல் அருகே சென்றபோது, திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்களுக்கு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து, பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் மூலம் போராடி மேலே எடுத்தனர். பாதாள சாக்கடை கால்வாய் கீழே செல்வதால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தரமணி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடைய சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கும் மெட்ரோ ரயில் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.