அன்று பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பு... இன்று பறிபோன உயிர் - பாம்பு கடித்த சிறுமியை தூளியில் தூக்கிச் சென்ற அவலம்!
பென்னாகரம் அணைக்கட்டு கிராமத்தில், பாம்பு கடித்த 14 வயது சிறுமி தூளி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு அருகே உள்ள வட்டவன அள்ளி
ஊராட்சியில் அமைந்துள்ளது அணைக்கட்டு கிராமம். இந்த கிராமம் பிற கிராமங்களுடன் தொடர்பில்லாமல், சுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு வனப்பகுதியின் உள்ளே அமைந்துள்ளது. கிராமத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இக்கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா சிவலிங்கி என்பவரின் இளைய மகள் கஸ்தூரியை (வயது 14), விஷப்பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக அப்பகுதி இளைஞர்கள் 8 கி.மீ தொலைவிற்கு சிறுமியை தூளிக்கட்டி தூக்கிச் சென்றுள்ளனர். 8 கி.மீ தூரத்தை தாண்டிய பிறகு சாலை வசதி இருப்பதால், அங்கிருந்து ஆட்டோ மூலம் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, முதல் உதவி சிகிச்சைக்கு சிறுமியை அனுமதிக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். ஆனால் தூளி கட்டி அழைத்துச் செல்லும் வழியிலேயே, சிறுமி உயிர் இழந்துள்ளார்.
சாலை வசதி இல்லாமல், இத்தகைய நவீன காலத்திலும் பாம்பு கடித்த சிறுமியை எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தூளி கட்டி சுமந்து செல்லும் அவலம், இன்றும் தொடர்கதையாக உள்ளது. சாலை வசதி இல்லாததால் தான், இச்சிறுமி கடந்த ஆண்டு எட்டாம் வகுப்புடன் தனது பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்டார். தற்போது மருத்துவமனைக்கு செல்ல அதிக தாமதமானதால் பாம்பு கடித்த சிறுமி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, மலை கிராமப் பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கிராமப் பகுதிக்கு முறையாக சாலை வசதி அமைத்தும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் சுகாதார நிலையமும் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.