கடலூர் தனியார் பள்ளி விடுதி கழிவறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!
விழுப்புரம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவரது 2வது மகள்
கோவஶ்ரீ. இவர் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இவரது தந்தை வடிவேல் கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் மாணவி கோவஸ்ரீ திடீரென்று பள்ளிக்கு செல்லவில்லை. மேலும்
உடல்நிலை பாதிக்கப்பட்ட சக தோழியுடன் விடுதியில் இருந்து வந்தார். பின்னர்
விடுதி கழிவறை பகுதியில் கோவஸ்ரீ தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். தொடர்ந்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விடுதி காப்பாளர் ரேவதி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக தூக்கிட்ட நிலையில் இருந்த மாணவி கோவஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மாணவி கோவஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவஸ்ரீ உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தநிலையில், இறந்த கோவஸ்ரீயின் தாயார் ஸ்ரீவித்யா தனது மகளை கொன்றுவிட்டனர். தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கதறி அழுதார். தொடர்ந்து சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் பள்ளி மாணவி கோவஸ்ரீ தூக்கிட்டு இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.