For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை!

08:21 PM Jan 02, 2024 IST | Web Editor
கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட போதும், சென்னை நகருக்குள் வசிக்கும் மக்கள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளது. 

Advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில்  88 ஏக்கர் பரப்பளவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள இங்கு, 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள், முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2,285 வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி, 500 தனியார் பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சுமார் 35 கி.மீ தூரம் பயணித்து இந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதே போன்று தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வரும் மக்கள் கிளாம்பாக்கத்திலேயே இறக்கிவிடப்படும் நிலையில், அங்கிருந்து கூட்ட நெரிசல் மிக்க மாநகர பேருந்தில் மாறி சென்னை வரவேண்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர். வயதானவர்களும், குழந்தைகளை அழைத்து வருபவர்களும் அசௌவுகரியங்களை தவிர்க்க தனியார் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தும் போது அதிக செலவீனம் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த பேருந்து முனையத்தின் முக்கிய நோக்கமே நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுதான். அப்படி இருக்க ஒரு பேருந்தில் வரும் பயணிகள், பல வாகனங்களில் சென்னை நகருக்குள் வரும் போது, ஏற்கனவே இருந்ததை விட பலமடங்கு அதிகமான வாகன நெரிசல் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னை பண்டிகை காலங்களில் மேலும் தீவிரமடையும் என தெரிவிக்கும் மக்கள், கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ள பேருந்து முனையம் தேவைப்படுவோர் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போலவே செயல்பட அரசு ஆவண செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags :
Advertisement