சீனாவில் மனிதரை காப்பாற்றி உயிரிழந்த குதிரைக்கு அரசு சார்பில் சிலை!
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில், நீரில் மூழ்கிய ஒருவரை மீட்பதில் முக்கிய பங்கு வகித்த வெள்ளைக் குதிரையான பைலாங் இறந்த செய்தி அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகளும், நாடு முழுவதும் உள்ள மக்களும் ஆன்லைனிலும், நேரில் சென்றும் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
ஹுபே மாகாணத்தின் சியான்டாவோ நகரத்தைச் சேர்ந்தவர் உய்குர் யெலிபே டோசுன்பெக் (வயது 39). இவர் பைலாங் அல்லது வொயிட் டிராகன் என்றழைக்கப்பட்ட 7 வயதுடைய வெள்ளை நிற குதிரையை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ஸியாந்தாவோவிலுள்ள ஓர் ஆற்றின் கரையில் அவர் தனது குதிரைக்கு பயிற்சியளித்து வந்துள்ளார்.
அப்போது அந்த ஆற்றில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியதை பார்த்த அவர் சற்றும் தாமதிக்காமல், அவரது குதிரையை ஆற்றினுள் இறக்கியுள்ளார். சுமார் 40 மீட்டர் தூரத்திற்கு நீந்திச் சென்ற அந்த குதிரையும் அதன் உரிமையாளரும் உயிருக்கு போராடிய அந்த நபரை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
அதுவரை பைலாங் நீந்தியதில்லை என யெலிபே டோசுன்பெக் கூறுகிறார். மறுநாள் குதிரைக்கு பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளது. இதனை கவனித்த அதன் உரிமையாளர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பின் குதிரையின் உடல்நலம் தேறியுள்ளது. தொடர்ந்து பிப்.6ஆம் தேதி குதிரைக்கு பாராட்டு விழா உள்ளூர் அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்டுவுள்ளது. இந்த விழாவில் குதிரைக்கு சிவப்பு நிற பட்டை அணிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் குதிரையின் உடல்நலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குதிரையின் உடல்நிலை மோசமடைந்து, அதிக காய்ச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை இருந்தபோதிலும் பைலாங் பிப்ரவரி 11 ஆம் தேதி இறந்தது. இந்த செய்தி சீனா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்த, சியான்டாவோ நகர அரசு அந்த குதிரையின் வீரச் செயலுக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக அந்த ஆற்றின் கரையில் பைலாங் குதிரைக்கு சிலை ஒன்று நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அந்நகரத்தில் நடத்தப்படும் ஆற்றைக் கடக்கும் போட்டிக்கு 'பைலோங்மா கோப்பை' என்று பெயர் மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.