கும்பகோணத்தில் ‘காசி தமிழ் சங்கமம்’ சிறப்பு ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
‘காசி தமிழ் சங்கமம்’ சிறப்பு ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில், ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
கலாச்சார மையங்களாக திகழும் வாரணாசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல்கட்ட நிகழ்வு கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கு, தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது, காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் துவங்கியுள்ளது. இதற்காக ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர விரைவு ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். இவரின் கோரிக்கையை எற்று பனாரஸிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் நிரந்தரம் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பனாரஸிலிருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து வியாழக்கிழமைக்தோறும் பனாரஸூக்கும் இந்த புதிய ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், பனாரஸிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ரயிலுக்கு, கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.