For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும்’ - சிவசேனா கோரிக்கை!

09:55 AM Dec 13, 2023 IST | Web Editor
’நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும்’    சிவசேனா கோரிக்கை
Advertisement

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் தான்வே கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

திஷா சாலியானின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு அரசு நடவடிக்கை எடுக்குமானால்,  அதே போல சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா மரணம் குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தான்வே தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஷொராபுதீன் ஷேக் என்கவுண்டர் போலியானது என்றும்,  இதில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும்,  2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த கொலைகளின் பின்னணியில் அமித்ஷா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு,  அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கின் சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி இடம் மாற்றப்பட்டார்.  அதன்பிறகு இந்த வழக்கானது நீதிபதி லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது.  2014ம் ஆண்டு  டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அமித்ஷாவுக்கு தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் ஷொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் கோரி மும்பை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுநல வழக்கு முன்னரே தொடரப்பட்டது.  "நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதுதான்,  அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,  அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

திஷா சாலியான் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசாரால் கூறப்பட்டாலும், பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.  இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சாலியானின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், திஷா சாலியான் வழக்கில் எஸ்ஐடி விசாரணை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சிவசேனை கட்சியைச் சேர்ந்த தலைவர் தான்வே,  "திஷா சாலியான் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமானால்,  நீதிபதி லோயா மரணம் தொடர்பாகவும் எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement