புத்தாண்டு தரிசனம் | வடபழனி முருகன் கோயிலில் குவியும் பொதுமக்கள்!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை முருகனுக்கு வெள்ளி நாணய கவச அலங்காரமும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்ககவச அலங்காரமும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரமும் நடைபெற உள்ளது. இது மட்டுமல்லாமல் பல வண்ண மலர்களால் பூ அலங்கரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் செய்ய வடபழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள தெற்கு ராஜகோபுரம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வரிசைகளிலும் 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய்க்கான சிறப்பு சீட்டுகளும் மற்றும் 5 ரூபாய்க்கான அர்ச்சனை சீட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு குடிநீர் வசதியும் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனம் செய்வதற்காக முருகன் கோயில்
முழுவதும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. 10 சுற்றுகளுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தனி வழியில் சென்று சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அதிகாலை முதலே சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் சாமி தரிசனத்திற்காக வந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.