“பெண்களை கடவுளாக பார்க்கும் சமூகம் மிகவும் ஆபத்தானது” - ஜென்டில்வுமன் பட விழாவில் இயக்குநர் ராஜூ முருகன் பேச்சு
அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜென்டில்வுமன்’. இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா மரியநேசன், ராஜீவ் காந்தி, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்களை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லெனின் பாரதி, ராஜூ முருகன், த.செ. ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் ராஜூ முருகன் பேசியதாவது,
“உதவி இயக்குநர்களுக்கு முக்கியமான கற்றலாக நினைப்பது இலக்கியமும் பயணமும்தான். அதை கற்றுக்கொள்ளாதவர்கள் வெளிநாட்டு படங்களை பார்த்து படம் எடுப்பது, வெறும் எழும்புகூடாக இருக்கும். அதற்குமேல் அவர்களால் அதில் பயணிக்க முடியாது. ஆனால், வாழ்கை, இலக்கியம், பயணம், அரசியல் ஆகியவற்றை கற்றுக்கொண்டு இருப்பவர்கள் இயக்குநராக நீண்ட தூரம் பயணிக்க முடியும். அப்படி உதவி இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாசிப்பை, இலக்கியத்தை, அரசியலை அறிமுகப்படுத்தும் இடமாக யுகபாரதி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த பட்டறையில் இருந்து வந்தவர்தான் ஜோஸ்வா.
அதனால் இந்த படம் முக்கியமான பாடுபொருளைக் கொண்ட படமாக இருக்கும் என நான் நினைகிறேன். இந்த படம் 20 நாளில் எடுக்கப்பட்ட படம் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். இங்கு இருக்கும் பிரச்னையே புனிதப்படுத்துவதுதான். என் மனைவியை சமமாக நடத்துகிறேன், நான் சாதி பார்ப்பதில்லை, எல்லோரையும் என் வீட்டினுள் அனுமதிப்பேன் என்று சொல்பவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.
நீ யார் அதை செய்ய? என்பதுதான் கேள்வி. அப்படி சமகாலத்தில் முக்கிய பிரச்னையாக நான் பார்ப்பது புனிதப்படுத்துவது. விஞ்ஞான ரீதியாக எவ்வளவோ கடந்து வந்துவிட்டோம். ஆனால் தனி மனித உணர்வுகளிலும் அரசியல் உணர்வுகளிலும் நாம் தேங்கி போய்விட்டோம். இன்றைக்கு சாதாரணமாக பெண் குறித்தான வசனத்தை வைக்க முடியவில்லை. யாரெல்லாம் தங்களை காலாச்சார காவலர்கள் என தங்களை பிரகடனப்படுத்திக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் உள்ளுக்குள் அழுக்கை வைத்திருப்பவர்கள்.
அவர்கள்தான் இந்திய சமூகத்தின் மிகபெரிய எதிரிகள். பெண்களை கடவுளாக பார்க்கும் சமூகம் என்பார்கள். எதற்காக பெண்களை கடவுளாக பார்க்கிறார்கள். பெண்களை மனுஷியாக பாருங்கள். பெண்களை கடவுளாக பார்க்கும் சமூகம் மிகவும் ஆபத்தான சமூகம் என்று நான் நினைக்கிறேன். பெண்களை மனுஷியாக பார்த்து அவர்கள் மொழியில் உரையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அதை இந்த படம் செய்திருக்கும் என நான் நம்புகிறேன்.”
இவ்வாறு இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.