கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!
கோயம்பத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் குடியிருப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் பாம்பு பிடி வீரரான சந்தோஷுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த சந்தோஷ் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த நாக பாம்பு பாம்பு பிடி வீரர் சந்தோசை கடித்தது. தொடர்ந்து சந்தோஷ் உடடினயாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில், சந்தோஷ் நேற்று (மார்ச்.19) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறப்புக்கு இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாம்பு பிடி வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் எனவும் உயிரிழந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சந்தோஷ் கடந்த 20 ஆண்டுகளாக ராஜா நாகம் உள்பட பல விஷ பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடித்து வனப் பகுதியில் விடுவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.