முடிவுக்கு வந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலான சேவை - இனி ‘ஸ்கைப்’-க்கு பதில் ‘டீம்ஸ்’!
ஸ்கைப் செயலி கடந்த 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த செயலி முதலில் இலவச குரல் அழைப்பு சேவையாக கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து 2004 ஆண்டு இதன் பயன்பாடு உலகளவில் விரிவடைய ஆரம்பித்தது. இறுதியாக 2011 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்கைப் செயலியை கைப்பற்றியது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கோலோச்சி வந்த இந்த செயலி, செல்போன் யுகத்திற்கு பிறகு அதன் பயன்பாடு வேகமாக குறைய ஆரம்பித்தது. காரணம் அதற்கு மாற்றாக வாட்ஸ் அப், ஜூம் உள்ளிட்ட பல்வேறு வீடியோ கால் சேவையளிக்கும் செயலிகள் போட்டியாக வந்ததால் ஸ்கைப் செயலியின் புகழ் மங்க தொடங்கியது. இந்த சூழலில் ஸ்கைப் செயலியின் பயன்பாட்டை நிறுத்தப்போவதாக அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று(மே.5) முதல் ஸ்கைப் செயலி பயன்பாடு முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை ஸ்கைப் பயன்படுத்திய பயனர்கள் அதே கணக்கை கொண்டு மைக்ரோசாஃப்ட்டின் மற்றொரு செயலியான டீம்ஸை பயன்படுத்தலாம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் செயலி பயன்பாடு முடிவுக்கு வந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் அதன் பயனர்கள் பிரியாவிடை கொடுத்து, பயன்படுத்திய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.