"சுயசார்பு மற்றும் தன்னிறைவு பாரதம் என்பதே தற்கால அத்தியாவசியம்" - பிரதமர் மோடி பேச்சு.!
புதிய ஜி.எஸ்.டி வரிக்குறைப்பானது நாளை அமலாக உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது,
”நாளை நவராத்திரி தொடங்கும் முன் புதிய ஜி.எஸ்.டி வரிகள் அமலாகவுள்ளன. புதிய அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி மூலம் ஏழைகள், வியாபாரிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்த புதிய ஜி.எஸ்.டி வரிகள் இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும். புதிய ஜிஎஸ்டி அமலாகுவதன் மூலமாக வெளிநாட்டில் இருந்து புதிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் (FDI). உங்களுக்கு பிடித்தமான பொருட்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை முதல் வாங்க முடியும்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மகளிர், வேளாண்துறையினர், இளைஞர்கள் என அனைவருக்கும் பொருட்களை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. இரண்டாம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை உண்டாக்கும். நவராத்திரியின் முதல் நாளிலிருந்து, நாடு சுயசார்பினை நோக்கி ஒரு மிகப்பெரிய அடியை எடுத்து வைக்கிறது.
இந்த ஜிஎஸ்டி குறைப்பு உங்கள் சேமிப்பை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் விரும்பும் பொருட்களை எளிதாக வாங்க அனுமதிக்கும். 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி வரம்புகள் மட்டுமே பெரும்பாலான பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி கணிசமாக குறையும். கடந்த 2017ல் இந்தியா ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்கியது. தற்போது இது ஒரு சகாப்தத்தின் முடிவையும் அதன் பொருளாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஏழைகள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி புதிய நடுத்தர வக்கத்தினராக உயர ஜிஎஸ்டி வரி குறைப்பு உதவுகிறது.
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்தோம், ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்தோம், ஒவ்வொரு கேள்விக்கும் தீர்வுகளைக் கண்டோம். அனைத்து மாநிலங்களையும் அனைவரையும் ஒருங்கிணைத்ததன் மூலம், சுதந்திர இந்தியாவில் இவ்வளவு பெரிய வரி சீர்திருத்தம் சாத்தியமானது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாகவே நாடு டசன் கணக்கான வரிகளின் வலையிலிருந்து விடுவிக்கப்பட்டது.தன்னிறைவு பெற்ற பாரதம் என்பதற்கு இந்த புதிய அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி ஊன்றுதலாக அமையும். நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய பொருட்களை அனைவரும் வாங்க வேண்டும். அனைத்து பொருட்களையும் உள்நாட்டிலேயே கட்டாயம் தயாரிக்க வேண்டும். சுயசார்பு மற்றும் தன்னிறைவு பாரதம் என்பதே தற்போதை காலத்தின் அத்தியாவசியானதாக உள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்கள் சிறந்த தரத்துடன் அமைய வேண்டும். அகில உலக அளவில் சிறந்த தரத்துடன் பொருட்களை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் பொது சுதேசி கொள்கை கை கொடுத்தது போல இந்தியாவை வலுவாக உருவாக்க சுதேசி பொருட்கள் கைகொடுக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை நுகர்வோர் கர்வத்துடன் பயன்படுத்த வேண்டும். நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால கனவுகளை மனதில் கொண்டு இந்த புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இப்போது 5% மற்றும் 18% வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும்.
2014ம் ஆண்டு உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் எங்களுக்கு வாய்ப்பளித்தபோது, பொது நலனுக்காகவும், தேசிய நலனுக்காகவும் ஜி.எஸ்.டியை எங்கள் முன்னுரிமையாக மாற்றினோம். ஜி.எஸ்.டி மூலம் ஒரே நாடு, ஒரே வரி என்ற கனவு நனவாகியுள்ளது"
என்று தெரிவித்துள்ளார்.