பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் பட்டியல் தயார் -திருச்சி எஸ்.பி எச்சரிக்கை!
திருச்சியில் வாகனங்களில் பட்டாசுகளை கட்டிக்கொண்டு சாகசம் செய்து இளைஞர்கள் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சமூக வலைதளங்களில் பதிவிடும் இளைஞர்களின் பட்டியல் தயாராகி வருவதாக, திருச்சி எஸ்.பி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து கொண்டே இளைஞர்கள் பட்டாசு வெடித்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவ்வாறு வீலிங் செய்தது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் திருச்சியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து, திருச்சி மாநகரில் பைக் வீலிங் செய்வது தொடர்பாக இன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்ததில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் திருச்சி டைமண்ட் பஜாரை சேர்ந்த உசேன் பாஷா(24) என்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் உசேன் பாஷாவை கைது செய்து அவர் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருச்சி பால் பண்ணை பகுதியில் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(21) என்பவர் அதிவேகமாக பைக் ஓட்டி சாகச முயற்சியில் ஈடுபட்டார். அவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் குழுமாய்கரை ரோட்டில் பைக் வீலிங் செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் பைக் வீலிங் செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் இவர்தான் பைக் வீலிங் செய்து கொண்டு பட்டாசு வெடித்த இளைஞரில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.
அதனையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து அவர் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பைக் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். https://t.co/nt3pAKhXQY
— Dr.Varun Kumar IPS (@VarunKumarIPSTN) November 14, 2023
இந்த நிலையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சமூக வலைதளங்களில் பதிவிடும் இளைஞர்களின் பட்டியல் தயாராகி வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி எஸ்.பி வருண்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.