“பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்” - ராணா சனவுல்லா!
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. தற்போது வரை 9 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா இடையே பத்தாவது போட்டி நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. கடைசி போட்டியும் மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரி ராணா சனவுல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து பேசிய அவர்,
“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனிப்பட்ட நிறுவனம். அவர்கள் நினைத்ததை செய்யக்கூடியவர்கள். பாகிஸ்தான் அணியை குறித்து அமைச்சரவை, மக்களவையில் பேச பிரதமரிடம் வேண்டுகோள் வைப்பேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சமீப பத்தாண்டுகளாக பல உயர்வு, தாழ்வு ஏற்பட்டு கிரிக்கெட் வாரியத்தை பலமுறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் செலவு குறித்து மக்கள் பார்வைக்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும். ஆலோசகர்கள் ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு அவர்களது கடைமையே தெரியாததுபோல இருக்கிறார்கள். வேலை செய்யாமலே பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சலுகைகள், சிறப்புகளைப் பார்த்தால் இது பாகிஸ்தானா அல்லது வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடா என நீங்களே அதிசயப்படுவீர்கள். அதனால் இந்த விஷயங்களை செபாஷ் செரீப்ஃபின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். பிசிபியில் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதால்தான் பாகிஸ்தான் அணியின் நிலைமை இப்படி இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ளது நிலையான ஒரு நல்ல கிரிக்கெட் வாரியம் வேண்டும். அங்கு இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.