கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
பாஜக ஆட்சிக்கு வந்த பின் நாட்டில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்கள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
- குறிப்பாக, ஏழைகள் பெண்கள் விவசாயிகள் இளைஞர்கள் ஆகிய நான்கு தரப்பினருக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
- மேலும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை, வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 70% ஆன வீடுகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
- தொடர்ந்து, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
- கர்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி-ஜன் ஆரோக்யா யோஜனா என்பது உலகின் மிகப் பெரிய பொது நிதியுதவி அளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும், இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை பலன் வழங்கப்படுகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 12 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.
- இந்த திட்டம் அங்கன்வாடி மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.