கோட்டாவில் உயிரைமாய்த்துக் கொண்டதாக பெண்ணின் படம் வைரல் - உண்மை என்ன?
This News Fact Checked by ‘AajTak’
நடப்பு ஆண்டில் இதுவரை, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவர் நீட் தேர்வுக்கும், மூன்று பேர் ஜேஇஇக்கும் தயாராகி வந்தனர். இந்த சோகமான சம்பவங்களுக்கு மத்தியில், ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது கோட்டாவில் தற்கொலை செய்து கொண்ட இந்த பெண்ணின் பெயர் கிருத்தி என்றும் இந்த சிறுமி, தனது தற்கொலை குறிப்பு மூலம், பயிற்சி நிறுவனங்களை மூடுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் எழுதி வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த மாணவி கிருதிக்கு ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், குவாண்டம் பிசிக்ஸ் போன்ற பாடங்களில் ஆர்வம் இருந்ததாகவும், அவர் பி.எஸ்சி. படிக்க விரும்பியதாகவும் ஆனால் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி மருத்துவராக்க முயற்சித்ததாகவும் எழுதியுள்ளனர். இந்த புகைப்படத்தில் காணப்படும் சிறுமிக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே சமயம், சிலர் இந்த சிறுமியின் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதுடன், "தோல்விக்கு பெற்றோரை குறை சொல்லும் பெண், மற்றவர்களுக்கு என்ன அறிவை கொடுக்கப் போகிறாள்" என்று கிண்டலாகவும் எழுதியுள்ளனர்.
Bhiwani Hustle மற்றும் ibc24 போன்ற சில ஊடக அமைப்புகளும் கோட்டாவில் மாணவி கிருத்தி தற்கொலை செய்து கொண்ட செய்தியுடன் இந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் ஜோதி தாக்கூர் என்ற பெண்ணின் புகைப்படம் என்று ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது. இந்த புகைப்படத்துடன் பகிரப்படும் கோட்டாவில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் கதை, கிருத்தி திரிபாதி என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்புடையது. ஆனால் கோட்டாவில் கிருத்தி தற்கொலை செய்துகொண்டது தற்போது அல்ல 2016ல் ஆகும்.
உண்மையை சரிபார்ப்பு :
வைரலான பதிவிற்கு சிலர் எதிர்வினையாற்றும் போது இது வேறு பெண் என்று எழுதுவதைப் பார்த்தோம். @tissa_vaasi.06" என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த ஒரு நபர், " நான் உயிருடன் இருக்கிறேன், ஏன் என் படத்தை எடுத்தீர்கள்" என்று எழுதினார். இன்ஸ்டாகிராம் கணக்கு "@tissa_vaasi.06" ஜோதி தாக்கூர் என்ற பயனர் சமூக ஊடகத்தில் Influencer ஆக இருப்பவர். இதைப் பார்த்ததும் இந்தப் புகைப்படம் ஜோதி தாக்கூரின் புகைப்படமாக இருக்கலாம் என்று உணர்ந்தோம். ஜோதி டிசம்பர் 14, 2024 அன்று Instagram இல் சில படங்களைப் பகிர்ந்துள்ளார். இவற்றில் வைரலான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
கோட்டாவில் தற்கொலை செய்து கொண்ட கிருத்தியின் கதை ?
பிபிசி அறிக்கையின்படி, ஏப்ரல் 28, 2016 அன்று ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கிரித்தி திரிபாதி என்ற பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பயிற்சி நிறுவனங்களை மூட இந்திய அரசைக் கோரி ஐந்து பக்க தற்கொலைக் குறிப்பை எழுதியிருந்தார். தவிர, தனக்கு ஆஸ்ட்ரோ இயற்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியலில் ஆர்வம் இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் அப்போது சில ஊடக நிறுவனங்கள் கிருத்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டன.
இந்த புகைப்படத்தில் காணப்படும் சிறுமி வைரலான புகைப்படத்தில் உள்ள பெண்ணிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய ஜோதி தாக்கூரின் சகோதரர் சஞ்சய் தாக்கூரை தொடர்பு கொண்டோம். புகைப்படத்தில் காணப்பட்ட பெண் தனது சகோதரி ஜோதி தாக்கூர் என்று எங்களிடம் கூறினார். சஞ்சய், "எங்கள் குடும்பம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மஷாலாவில் வசிக்கிறது. ஜோதி கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் படிக்கவில்லை, அங்கு வசிக்கவும் இல்லை. இந்தப் புகைப்படம் ஒரு மாதத்திற்கு முன்பு தரம்ஷாலாவில் எடுக்கப்பட்டது." ஜோதி இந்த விஷயத்தைப் பற்றிய தனது விளக்கத்தின் வீடியோவையும் ஆஜ் தக்குடன் பகிர்ந்துள்ளார்.
2016-ம் ஆண்டு கோட்டாவில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் கதை இப்போது மற்றொரு பெண்ணின் புகைப்படத்துடன் சொல்லப்படுவது தெளிவாகிறது.
Please don't spread fake news 🙏🏻 pic.twitter.com/YsJ7CD9Wg2
— Jyoti thakur (@tissavaasi06) January 20, 2025
முடிவு :
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பயிற்சி மையத்தில் படித்த சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக ஒருபடம் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து ஆஜ்தக் நடத்திய உண்மை சரிபார்ப்பில் வைரலான படம் ஹிமாச்சல பிரதேசத்தை சார்ந்த ஜோதி தாக்கூரின் படம் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் கிருத்தி என்கிற சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் தற்போதையது அல்ல 2016ம் ஆண்டு நடந்ததாகும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.