முதன்முறையாக வெளியானது அயோத்தி கோயில் கருவறையில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலையின் புகைப்படம்!
அயோத்தி ராமர் கோயில் கருவறையில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலையின் புகைப்படம் முதன் முறையாக வெளியாகியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கருவறைக்குள் வைக்கப்பட்ட ராமர் சிலையின் புகைப்படம் முதன் முறையாக தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஊடகப் பொறுப்பாளர் சரத் சர்மா பகிர்ந்துள்ளார்.