வங்கியில் தவறுலதாக வேறொரு கணக்கிற்கு அனுப்பட்டபட்ட ரூ.5 லட்சத்தோடு தலைமறைவான நபர்... மாநிலம் தாண்டி சென்று பணத்தை மீட்ட பரமக்குடி போலீசார்!
மருத்துவ செலவிற்காக வங்கி கணக்கில் தவறுதலாக அனுப்பப்பட்ட 5 லட்சம் ரூபாயை திருப்பதிக்கு சென்று போராடி மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பரமக்குடி நகர் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் சென்னையில் வசிக்கும் தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவ செலவிற்காக தனது நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். அதனை உறவினரின் வங்கி கணக்கில் செலுத்துவதற்காக கடந்த மாதம் பரமக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு சென்றுள்ளார். வங்கியில் சலான் நிரப்பும்போது வங்கி கணக்கு எண்ணை தவறாக எழுதி, பெயரை மட்டும் சரியாக எழுதி உள்ளார். இதனை வங்கி ஊழியர்கள் சரிபார்க்காமல் 5 லட்சம் ரூபாயை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குணசேகர ரெட்டி என்பவரின் வங்கி கணக்கிற்கு வரவு வைத்து விட்டனர்.
இந்நிலையில் கலைச்செல்வியை தொடர்புகொண்ட உறவினர்கள் பணம் இன்னும் வரவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் அந்த பெண் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்று முறையிட்ட பொழுது பணம் தவறுதலாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குணசேகர ரெட்டி என்பவரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து குணசேகர ரெட்டியை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளனர்.அதற்கு அந்தப் பணம் மோடி அனுப்பியது. அதனை செலவு செய்துவிட்டேன். திருப்பி தர முடியாது எனக்கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் கிளையிலிருந்து
கிளை மேலாளர், ஸ்ரீ குணசேகர ரெட்டி மீது புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் குணசேகர ரெட்டியை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ததால் பணத்தை மீட்க முடியாமல் இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சந்ததீஸ் உத்தரவின் பேரில், பரமக்குடி நகர் காவல் சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து ஆந்திர மாநிலத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குணசேகர ரெட்டி வசித்த முகவரியை கண்டறிந்து விசாரித்த பொழுது, அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார் என அருகில் இருந்த உறவினர்கள் கூறியுள்ளனர்.
இருந்தபோதிலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக ஆந்திர மாநிலத்தில் தங்கி விசாரணை செய்ததில், குணசேகர ரெட்டி திருப்பதியில் சிக்கன் கடை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து திருப்பதிக்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் குணசேகர ரெட்டி வசிக்கும் இடத்தை நோட்டம் செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாயை போராடி மீட்டு, கலைச்செல்வியின் வங்கி
கணக்கில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக குணசேகர ரெட்டிக்கு பரமக்குடி நீதிமன்றத்தில்
சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ செலவிற்காக மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணத்தை மாநிலம் விட்டு மாநிலம் சென்று போராடி மீட்ட பரமக்குடி நகர்
காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.