விமானத்தில் தரப்பட்ட உணவு குறித்த பயணி ஒருவரின் கிண்டல் பதிவு இணையத்தில் வைரல்!
டாடாவின் விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவு விடுதியில் தரப்படும் உண்ண முடியாத உணவை நினைவூட்டியதாக பயணி ஒருவர் X தள பக்கத்தில் பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
கிரிபால் அமன்னா என்ற பயணி ஒருவர் டாடாவின் விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்திருக்கிறார். பயணத்தின் போது அவருக்கு உணவு பரிமாரப்பட்டிருக்கிறது. அந்த உணவு மிகவும் மோசமாக இருந்ததால் அதனை புகைப்படம் எடுத்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டதோடு சில கருத்துகளையும் முன்வைத்தார்.
அவர் தனது X தள பக்கத்தில், ஆஹா! விஸ்தாரா, UK820 விமானத்தில் தரப்பட்ட உங்கள் உணவு கடந்த கால ஏக்க உணர்வைத் தூண்டியது! மோசமாக இயங்கும் ஹாஸ்டல் மெஸ்ஸில் அலட்சிய சமையல்காரர்களால் பரிமாறப்படும் சாப்பிட முடியாத உணவுகள் நினைவுக்கு வந்தன. பழைய கோழி இறைச்சி சகிக்க முடியாத சுவையுடன் இருந்தது. அதோடு சாக்லேட் இனிப்பு என மழலையர் பள்ளி உணவு பட்டியல் தரப்படுத்தப்பட்டுள்ளது. அற்புதம்! என கிரிபால் அமன்னா பதிவிட்டிருந்தார்.
மார்ச் 7 அன்று பகிரப்பட்ட இந்த பதிவு 1.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. அதோடு, கிரிபால் அமன்னாவின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஸ்தாரா ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வணக்கம் கிருபால், எங்கள் உணவுகள் அனைத்தும் மிக உயர்ந்த தரத்தை மனதில் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் உங்களின் ஏமாற்றத்தைக் கண்டு நாங்கள் வருந்துகிறோம். உங்கள் விவரங்கள், தொலைபேசி எண் மற்றும் உங்களைத் தொடர்புகொள்வதற்கான வசதியான நேரத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் வாயிலாக உரிய விசாரணை நடத்தி சிக்கலை விரைவில் தீர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.