நடிகர் ஷாருக்கானின் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டு கௌரவித்த பாரிஸ் மியூஸியம்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் உருவம் பொறித்த நாணயத்தை பாரிஸில் உள்ள மியூஸியம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். கடந்த ஆண்டு பதான், டங்கி, ஜவான் என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார் ஷாருக்கான். சமீபத்தில் உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அவரின் இந்த மூன்று படங்களில் இரண்டு படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த தொழிலதிபர் அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்ட இவர், மணமக்களுக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள பரிசு கொடுத்து அசத்தி இருக்கிறார் என்பதும் பேசுபொருளாகி உள்ளது. அடுத்ததாக கிங் படத்தில் நடிக்கவிருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு பெருமை கிடைத்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் கூலி படத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை லோகேஷ் நடத்தியதாகவும், ஆனால் ஷாருக் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள க்ரெவின் மியூஸியம், ஷாருக்கானின் உருவம் பதித்த சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து முதல்முறையாக இந்த பெருமையை பெறும் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் இந்தப் பெருமைக்காகப் பலரும் தங்கள் வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.
முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், செக் குடியரசு, தாய்லாந்து, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஷாருக்கானின் மெழுகு சிலைகள் தயாரிக்கப்பட்டன.