மருத்துவரை தொடர்ந்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச தனியார் மருத்துவமனையில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் தனியார் மருத்துவமனை ஒன்றில், தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று (ஆக.17) இரவு 7 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது செவிலியரை மருத்துவர் ஷாநவாஸ் சந்திக்க விரும்புவதாக கூறி, அவரை மருத்துவரின் அறைக்கு செல்லுமாறு மற்றொரு செவிலியரான மெஹ்னாஸ் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து மருத்துவரின் அறைக்கு செல்ல மறுத்த செவிலியரை மெஹ்னாஸும், மருத்துவமனையின் ஊழியர் ஜுனைத் என்பவரும் வலுக்கட்டாயமாக, மாடிக்கு அழைத்துச் சென்று ஓர் அறையில் வைத்து பூட்டியுள்ளனர்.
தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்த மருத்துவர் ஷாநவாஸ் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பாக செவிலியரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மருத்துவர் ஷாநிவாஸ், செவிலியர் மெஹ்னாஸ், ஊழியர் ஜுனைத் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சந்தீப் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சுகாதாரத் துறைக் குழு அறிவுறுத்தலின்பேரில், மருத்துவமனை மூடப்பட்டது.