சைவ உணவுக்கு பதில் அசைவம்...பாலக் பனீர் ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்யப்பட்ட சிக்கன் பலாக்!
சொமேட்டாவில் சைவ உணவு ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், அவர் அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது, டாக்ஸி புக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது போன்ற வழக்கம் பெருமளவில் பரவி உள்ளது. இவை எளிமையாக இருப்பதால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் தாம் ஷாப்பிங் மற்றும் உணவில் தாம் ஆர்டர் செய்ததற்கு பதிலாக வேறொன்று கிடைத்ததாக பலரும் குற்றம் சாட்டி வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அதேபோல ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.
அதாவது சைவ உணவு ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு சிக்கன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டா மூலம் உணவகத்திலிருந்து சைவ உணவை ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவு அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அதில் சிக்கன் துண்டு கிடந்ததை பார்த்த அவர், அதனை இணையத்தில் பகிர்ந்தார்.
அவர் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்ததாவது, "நான் சொமேட்டாவில் பாலக் பனீர் சோயா மற்றும் தினை புலாவ் ஆர்டர் செய்திருந்தேன். அவர்கள் எனக்கு பாலக் பனீருக்குப் பதிலாக சிக்கன் பலாக்கை டெலிவரி செய்தனர். நான் சைவ உணவை மட்டுமே தேர்ந்தெடுத்திருந்த போது, சிக்கன் டெலிவரி செய்வதை ஏற்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
அவரின் உணவில் சிக்கன் இருந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்த இடுகை நேற்று (ஜூலை 28) பகிரப்பட்டது. இது ஏராளமான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரின் இந்த பதிவிற்கு அவர் ஆர்டர் செய்த உணவகம் மற்றும் சொமேட்டோ நிறுவனம் அவருக்க மன்னிப்பு கோரியது.