”புதிய ஜே. என்.1 வகை கொரோனா வைரஸுக்கு அஞ்ச வேண்டாம்” - மருத்துவர் செல்வ விநாயகம்
புதிதாக பரவி வரும் உருமாறிய ஜே. என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலுக்கு பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. தற்போது ஜே.என்.1 கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் ஆய்வுகளின்படி, ஜே.என்.1ல் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
“ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது; இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.
புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன.
உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என மத்திய சுகாதாரத் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது புதிதாக பரவி வரும் உருமாறிய ஜே. என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலுக்கு பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர். செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.