தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு!
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் தவிா்த்து, அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு முத்திரை விதிகள் படி, ஆண்டுதோறும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்காகவும், வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக்குழு கடந்த ஏப்.26ம் தேதி கூடி வகுத்து அளித்தது. இதனை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக் குழுக்களால் மதிப்பு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணை குழுக்கள் மே மாதம் முதல்வாரம் கூடி மைய மதிப்பீட்டுக் குழுவின் அறிவுறுத்தல்கள் படி, வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான நடைமுறைகளை வகுத்தளித்தது.
பொதுமக்களிடம் இருந்து அறியப்பட்ட சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு, துணை குழுக்களால் வரைவு வழிகாட்டி மதிப்புக்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, மாவட்ட துணைக்குழு 3 வது முறையாக கூடி வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துக்களை பரிசீலித்து, முரண்பாடுகளை களைந்து, புதிய சந்தை வழிகாட்டி மதிப்பை அங்கீகரித்தது.
இது மைய மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு, கடந்த ஜூன் 29ம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் தவிர்த்து புதிய வழிகாட்டி மதிப்பு, நேற்று (ஜூலை 1) முதல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.