வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற நவம்பர் 29-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னை மண்ணடியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை.!
இதன் காரணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று முதல் வருகிற நவம்பர் 29-ம் தேதி வரை அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தமான் தீவுகள் பகுதியில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கக் கூடும். அவ்வப்போது 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வருகிற நவம்பர் 28-ம் தேதி மற்றும் 29-ம் தேதிகளில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். வருகிற நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.