வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எப்போது தெரியுமா?
வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது தீவிரமடைந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தீவிரமடைந்து பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் மகாராஷ்டிர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அக். 13 ஆம் தேதி காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.