குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் தொடர் - மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அறிமுகம்!
குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறும் என போட்டி தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன. மும்பை அணி வாய்ப்பை இழந்தது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 5 முறை கோப்பை வென்று பெரும் அணியாக வலம் வந்தது மும்பை. ஆனால் நடப்பாண்டில் 13 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதற்கு காரணம் ஹர்டிக் பாண்டியாவின் கேப்டன்ஸிதான் என பேச்சுகளும் எழுந்து வருகின்றன . இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குழந்தைகளுக்காக 'மும்பை இந்தியன்ஸ் கிட்ஸ்' என்ற புதிய யூ டியூப் பக்கத்தை திறந்துள்ளது. அதில் புதிய அனிமேஷன் தொடரையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த தொடருக்கு 'மைட்டி இந்தியன்ஸ்' எனவும் பெயரிட்டுள்ளது. இதற்கான டிரைலரையும் வெளியிட்டுள்ளது.