தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பும் இஸ்லாமியர்!
தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு பக்கிரான் என்ற இஸ்லாமியர் கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பி வருகிறார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த அருள்மகன் வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சத்திய ஞான சபை கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது. அணையாத ஜோதியாய் பசித்தோரின் பசிப்பிணி போக்கிடும் அருள் ஆலயமாய் விளங்கும் இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு 153-வது தைப்பூச விழா நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், தர்மசாலைக்கு 10 டன் காய்கறிகள் மற்றும் 50 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். அவற்றையும், 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும், சரக்கு வாகனம் மூலம் தர்மசாலைக்கு அனுப்பி வைத்தார்.
இதையும் படியுங்கள்: “ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இது குறித்து நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
"வடலூர் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகள் அனுப்பி வருகிறேன். மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, வாடிய கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கொள்கையையொட்டி வருடாவருடம் இந்த பொருட்களை அனுப்பி வருகிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்லாமியரான பக்கிரான், மதங்களை கடந்து உணவுப் பொருட்களை வழங்கி வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.