”புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை” - முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்,
மனவெளி மற்றும் பாகூர் தொகுதிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார்,
ரமேஷ் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,” எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சிறப்புக்கூறு நிதி கூடுதலாக ஒதுக்கப்படுவதாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் சிறந்த முறையில் வாழ வேண்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர வேண்டும்” என்றும் தெரிவித்தார்,
மேலும் அவர், “கடந்த ஆட்சியில் வேலை வாய்ப்பு கொடுக்கமுடியவில்லை, ஆனால் இந்த அரசு 5000 அரசு பணியிடங்களை நிரப்பியுள்ளது, மேலும் 1000 அரசு பணியிடங்கள் விரைவில் நிறப்பப்பட உள்ளது. அனைவரும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாகவும், ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் அதற்கு மாற்றாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அனைவருக்கும் வீடு என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”புதிதாக விண்ணப்பித்துள்ள 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு தற்போது மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், சட்டமன்றத்தில் அறிவித்தது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும்” எனவும் அறிவித்தார்.