வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (மே.22) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம் ) உருவாகிறது. புயல் தமிழக கடலோரத்தை நெருங்கியே செல்லும் என்பதால், அடுத்த 4 நாள்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
"தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து, மத்திய வங்கக்கடலில் 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதனால், இன்று (மே 21) முதல் 24 ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று (மே 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதனையடுத்து, நாளை (மே.22) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மே 23-ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 24-இல் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இன்று (மே.21) முதல் மே 24 வரை தமிழகம், கா்நாடகம், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல், குமரிக்கடல், மன்னாா் வளைகுடா, தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு சுமாா் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம்."
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.