என்னது அடுத்த ரவுண்டா? வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்கககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக புதுச்சேரி, தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போதுவரை அப்பகுதிகளை வெள்ளநீர் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பாதிப்பிலிருந்தே இன்னும் மக்கள் வெளிவராத நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு - வடமேற்கு திசையில் நகர கூடும். 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என தெரிவித்துள்ளது.