For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருப்பத்தூரில் தனியார் பள்ளி கார் பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தை - 11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது!

08:04 AM Jun 15, 2024 IST | Web Editor
திருப்பத்தூரில் தனியார் பள்ளி கார் பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தை   11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது
Advertisement

திருப்பத்தூரில் தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள கார்
பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தையை சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனவிலங்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Advertisement

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர்.  இதனையடுத்து சிறுத்தை வீட்டிலிருந்து அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியது.

அப்போது அங்கிருந்த வர்ணம் பூசும் தொழிலாளி கோபால் என்பவரின் தலையில் சிறுத்தை தாக்கியது.  பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பை தீவிரபடுத்த காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கினர்.

சிறுத்தை பதுங்கி இருந்த பள்ளியின் அருகே CIC ,  YMCA தோன்மிக்சாவியோ உள்ளிட்ட பள்ளிகள் உள்ளதால் பள்ளியில் உள்ள குழந்தைகள் பள்ளியிலேயே பாதுகாக்கப்பட்டனர்.  மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இதனிடையே, சிறுத்தை தனியார் பள்ளியில் இருந்து தாவி அங்குள்ள கார் பார்க்கிங்கில் பதுங்கியது.  இதனால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை மற்றும் காவல் துறையினர் திணறி வந்தனர்.

இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.  மேலும் சிறுத்தை பதுங்கி இருந்த கார் பார்க்கிங்கில் இரண்டு கார்களில் பாஸ்கர்,  இம்ரான்,  தினகரன்,  சாமிஜி,  எம்ஜிஆர் ஆகிய 5 பேர் சிக்கிக் கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஏணி மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து
வனவிலங்கு மருத்துவ குழு மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் மற்றும்
வேலூர் மண்டல வன பாதுகாவலர் பத்மா,  மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் ஆகியோர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வனவிலங்கு மருத்துவ குழுவினர் விடிய விடிய போராடி சுமார் 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.  வேலூர் மண்டல வன பாதுகாவலர் சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்து,  பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதாக தெரிவித்தார்.  பிடிபட்டது ஆண் சிறுத்தை எனவும், அதற்க சுமார் நான்கு வயது இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இச்சம்பவத்தால் இரவு முழுவதும் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags :
Advertisement