தைத்திருநாள் - வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்!
தமிழ் வருடப்பிறப்பு, ஆங்கில புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் தைத்திருநாளான இன்று (ஜன.14) வடபழனி மூலவர் பகுதி முழுவதும் பல்வேறு பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதல் வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலில் இன்று அதிகாலை 5 மணி அளவில் முருகனுக்கு சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு 5.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முருகனைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து முருகனை தரிசித்து தைத்திருநாள் பண்டிகையைத் தொடங்கி, அரோகரா அரோகரா என்ற கோஷங்களோடு அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோயிலின் நுழைவாயில் இருந்து தெற்கு கோபுரம் வரை இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முருகனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், காலை 8 மணி அளவில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மதியம் 12 மணி அளவில் தங்கக் காப்புடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மாலை 3.00 அளவில் வெள்ளி காப்புடன் அருள் பாலிக்க உள்ளார்.