அயோத்தி ராமர் கோயில் நடைதிறப்பு - கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நேற்று (ஜன.22) பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இதையும் படியுங்கள்: தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!
இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று (ஜன.23) முதல் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி முதலே, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் குவியத் தொடங்கினர்.
முதல் தரிசனத்தை காண வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். கோயில் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் கடும் சிரமம் ஏற்பட்டது.