"இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல்" - நியூஸ்7 தமிழுக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல் இருப்பதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் நேற்று முன்தினம் (ஜூன் 19) உயிரிழந்தனர். நேற்று (ஜூன் 20) மேலும் 19 பேர் இறந்தனர்.
இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் இன்று (ஜூன் 21) உயிரிழந்தனர். இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்தது. மேலும், 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், 49 பேர் உயிரிழப்புக்கு காரணமான விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் புதுச்சேரியில் இருந்து சாராய உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களை வாங்கி வந்து விநியோகம் செய்துள்ளார்.
சிபிசிஐடி போலீசாரிடம் ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பல முக்கிய நபர்கள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அவர் நியூஸ்7தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“ தீவிரமான புலன் விசாரணை மேற்கொண்டு மெத்தனால் மாஃபியா கும்பலை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த பகுதியில் மட்டுமில்லை தமிழ்நாடு முழுவதும் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று. இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல் வேலை செய்கிறது என கருத தோன்றுகிறது.
கருணாபுரம் பகுதியில் வெளிப்படையாகக் காலை 5 மணியிலிருந்து சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை கைது செய்யப்பட்டாலும் விடுதலையாகி மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இந்த விவகாரத்தோடு புலன் விசாரணையை முடித்துக் கொள்ளாமல் தமிழ்நாடு தழுவிய அளவில் கள்ளச்சாராயம் தொடர்பாக மெத்தனால் கள்ளச்சந்தையில் புழங்குவது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழு மதுவிலக்கை வலியுறுத்தி 24ம் தேதி சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது”
இவ்வாறு திருமாவளவன் எம்பி கூறினார்.