ஹைதராபாத்தில் வீடு... அரசு வேலை...முகமது சிராஜிற்கு பரிசாக அறிவித்த தெலங்கானா முதலமைச்சர்!
உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து தெலங்கானா திரும்பிய முகமது சிராஜிற்கு ஹைதராபாத்தில் ஒரு வீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த 29.06.2024 அன்று சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் வெற்றி ஊர்வலம் சென்றனர். அவர்களுக்கு வழிநெடுக ரசிகர்கள் கூடியிருந்து உற்சாகமாக வாழ்த்துகளை தெரிவித்தனர். இதன்பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் குவிந்தனர். அங்கு அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதன்பின்னர் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களுக்கு அந்தந்த ஊர்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய வீரரான தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சிராஜிற்கு ஹைதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வீரர் முகமது சிராஜை அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்-க்கு அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அதன்படி, முகமது சிராஜ்-க்கு ஹைதராபாத்தில் ஒரு வீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உறுதியளித்துள்ளார்.